புஷ் வெற்றி - உலகுக்கு ஆபத்து!
2000-இல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ·ப்ளோரிடா மாகாணத்து வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டபோது, அம்மாகாணத்தின் உள்துறை செயலரான கேத்தரின் ஹாரிஸ், புஷ்ஷின் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக இருந்தது, எத்தனை பேருக்குத் தெரியும்!? அவரது துரித(!) நடவடிக்கைகளால் அம்மாகாணத்தின் வாக்காளர் பட்டியலிலிருந்து கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கறுப்பு இனத்தவரின் பெயர்கள் நீக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அவர்கள் மேல் காவல்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி, இது நடைபெற்றது. [நம் நாட்டை, குறிப்பாக பீகாரை எண்ணிப் பாருங்கள்! இது போல ஒன்று (கட்டாய!) நடைமுறைக்கு வந்தால், தேர்தலில் நிற்பவர்கள் மற்றும் வாக்காளர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் தகுதி இழந்து விடுவார்கள் அல்லவா?] மேலும், கறுப்பினத்தவர் வாழும் மாகாணத்தின் பல இடங்களில் வாக்கு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை!
முதலில், புஷ் வெற்றி பெற்றார் என்றார்கள். பிறகு பத்திரிகைத்துறை நடத்திய மறு கணக்கெடுப்பில் அல்-கோரே அதிக வாக்குகள் எடுத்ததாகக் கண்டறியப்பட்டு இறுதியில் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டால் புஷ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இதை அறிவித்த நீதிபதி ஸ்கேலியாவின் மகன், புஷ்ஷின் வழக்கறிஞர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்றே!
2004 தேர்தலில் அத்தகைய பிரச்சினை எதுவும் இல்லை! புஷ் ஜெயித்ததற்கு இரண்டு ஆதார காரணங்களைக் கூறலாம். ஒன்று, பெரும்பான்மை அமெரிக்க மக்களின் 'உலகம் எக்கேடு கெட்டால் எனக்கென்ன, என் பாதுகாப்பும் சுகவாழ்வும் மட்டுமே எனக்கு முக்கியம், அதை செயல்படுத்தக் கூடியவர் அறிவு குறைந்தவராக, தன் சுயநலத்துக்காக (அதாவது, ஈராக்கின் எண்ணெய் வளத்தை உறிஞ்சுவது!) உலக நாடுகள் எதிர்த்தாலும் மோசமான செயல்களில் ஈடுபடுபவராக இருந்தாலும் எனக்கு அக்கறையில்லை' என்ற குருட்டுப் பார்வை. மற்றது, அமெரிக்கவில் 9/11-க்கு பின்னர் வேகமாக வளர்ந்து வரும் கிறித்துவத் தீவிரவாதக் கொள்கைகள்.
பெரும்பான்மை உலக மக்கள் (அமெரிக்காவின் ஈராக் போருக்கு ஆதரவான நாடுகளையும் சேர்த்து) புஷ் தேர்தலில் தோற்க வேண்டும் என்றே விரும்பினார்கள். புஷ் பிற நாட்டு மக்களின் மேல் ஜனநாயகத்தை தன்னிச்சையாகத் திணிக்க முயலும் அராஜகப் போக்கினால் தான் உலகளாவிய வெறுப்புக்கு ஆளாகி இருக்கிறார். முக்கியமாக ஈராக் போர்க் கைதிகள் மேல் நடத்தப்பட்ட அசிங்கமான முறைகேடான சம்பவங்கள் வெளிவந்தபோது பலர் கொதித்துப் போய் விட்டனர். புஷ் இதையெல்லாம் உணர்ந்ததாகவும் தெரியவில்லை, அப்படியே உணர்ந்திருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட்டதாகவும் தோன்றவில்லை! அவர் அமெரிக்கா தான் 'உலகக் காவலர்' (Policeman of the World) என்று திடமாக நம்பிக் கொண்டு முட்டாள்தனமான காரியங்களை செய்து வருகிறார். இன்னும் செய்வார் என்று உலக மக்கள் அஞ்சுகின்றனர்!
ஆனால், பெரும்பான்மை அமெரிக்கர்களுக்கு புஷ்ஷின் நடவடிக்கைகளால் உலகமே தங்களுக்கு எதிராகப் போனது பற்றி எந்த அக்கறையும் கவலையும் இல்லை என்றே கூறலாம். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அமெரிக்கா தனது முஷ்டி பலத்தால் (Fist power) பிற நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் மட்டுமே! அமெரிக்காவின் 50 லட்சம் இவாஞ்சலிகல் (Evangelical) தீவிர வகைக் கிறித்துவர்கள் புஷ்ஷின் வெற்றிக்காகத் தீவிரமாக(!) பாடுபட்டனர் என்பதும் ஒரு முக்கியச் செய்தி. இவர்கள் புஷ் மற்றுமொரு போர் (தீவிரவாதத்திற்கு எதிராக என்ற போர்வையில்!) தொடுத்தாலும் அதை வரவேற்கத் தயாராகவே உள்ளனர். அதற்கு, புஷ் ஒரு மறுபடி பிறந்த (BORN AGAIN) கிறித்துவர் என்ற காரணமே அவர்களுக்குப் போதுமானது. ஜார்ஜ் WORST புஷ்ஷின் அடுத்த இலக்கு சிரியாவோ, இரானோ, வடகொரியாவோ, யார் கண்டது? ஜான் கெர்ரி தோற்றார் என்பதை விட இத்தேர்தலில் உலகமே தோற்று விட்டது என்ற கூற்று சாலப் பொருந்தும்!
3 மறுமொழிகள்:
பொறுங்கள்..இன்னமும் வேடிக்கை நிறைய இருக்கிறது...
மூர்த்தி,
எங்கே இட்டுச் செல்லும்? உலக அழிவை நோக்கித் தான்!?!?! புஷ்ஷின் அராஜகத்தால்,அநியாயமாக
அப்பாவி மக்கள் கழுத்தறுபட்டும், தலை சிதறடிக்கப்பட்டும் தங்கள் உயிரை இழக்கிறார்கள்.
என்றென்றும் அன்புடன்
பாலா
புஷ்ஷோ கெர்ரியோ யாராக இருப்பினும் அமெரிக்க வெளி உறவில் ஒரு மாற்றமும் கிடையாது. 1964-ல் கோல்ட்வாட்டருக்கு எதிராய் நின்ற லிண்டன் ஜான்ஸன் வியட்னாமிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுவதாக வாக்களித்தார். நடந்ததோ முற்றிலும் வேறு. நிக்சன் காலத்தில்தான் வியட்னாமிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
தனிப் பட்ட முறையில் எனக்கு குடியரசுக் கட்சியினரையே அதிகம் பிடிக்கும். அவர்கள்தான் அமெரிக்கவின் கௌரவத்தை நிலை நாட்டுகிறர்கள் என்பது என் சொந்தக் கருத்து. இதை சிறிது விரிவுபடுத்திக் கூறுகிறேன். 1960 முதல் 1968 முடிய ஜனநாயக கட்சியினர் ஜனாதிபதி பதவியை தங்கள் வசம் வைத்திருந்தனர். அப்போது உலக நாடுகள் (முக்கியமாக அணி சேரா நாடுகள்) அமெரிக்க உதவியைப் பெற்றுக் கொண்டே அதற்கு எதிராக வேலை செய்து வந்தனர். 1969-ல் நிக்சன் வந்தார். ஐ.நா. வில் அமெரிக்கப் பிரதிநிதியான ழான் கிர்க்பாட்ரிக் எல்லா தலைவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதாவது அமெரிக்காவை எதிர்ப்பதாக இருந்தால் உதவி கிடைக்காது என்று. சம்பந்தப் பட்டத் தலைவர்கள் பதறிப் போய் வழிக்கு வந்தனர். நிக்ஸன் காலத்தில்தான் சீனாவுடன் உறவு சுமுகம் ஆனது. அதே போல ரீகன், புஷ் (தந்தை) காலத்தில்தான் கம்யூனிஸம் வீழ்ந்தது. பனிப் போர் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் கௌரவம் கொடி கட்டிப் பறந்தது. ஆகவே அமெரிக்கர் கண்ணோட்டத்தின்படி அவர்கள் செய்தது சரியே. புஷ்தான் தீவிர வாதத்தை ஒழிப்பார் என்று நம்புகிறார்கள். அவர்கள் கருத்தை மதிப்போம்.
Post a Comment